வெள்ளி, 23 அக்டோபர், 2009

காதல் கவிதைப் புத்தகம் வெளியீடும், புரோட்டாவும்

உலகத்தமிழ்ச்சிற்றிதழ்ச் சங்கத்தலைவரும், மகாகவி இதழாசிரியருமான வதிலை பிரபா கேட்டுக்கொண்டதனாலேயே குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் இயக்குநர் நண்பர் ராஜமோகனை ஏற்பாடுசெய்திருந்தேன். 11/10/09 ஞாயிறு காலை தேனியில் தேனி இன்டர்நேசனல் ஓட்டலில் கவிஞர் விஜயராஜ்காந்தியின் அழகியலே காதல் கவிதைநூல் வெளியீட்டுவிழா நிகழ்ச்சி. திரைப்பட இயக்குநர் கலந்து கொள்கிற நிகழ்வு. பிரமாதப்படுத்த வேண்டும் என்பதற்காகவே பெரிய ஓட்டலில் நிகழ்ச்சி வைத்திருப்பதாகவும், தங்குவதற்கு குளிரூட்டப் பட்ட அறை போட்டிருக்கிறோம் என்றும் பிரபா கைபேசியில் முன்னமே கூறியிருந்தார். நிகழ்வுக்கு முந்தைய நாளே வந்துவிடுங்கள் என்றும் பணித்திருந்தார். இவ்வளவு பிரமாதப்படுத்த வேண்டியதில்லை, இயக்குநர் மிகவும் எளிமையை விரும்பக் கூடியவர், சாதாரண அறை, சாதாரண உணவுவகையே போதும் என்றும் கூறியிருந்தேன். கவிஞர் விரும்புகிறார். செய்யட்டும் விடுங்கள் என்றார், பிரபா. அதேபோல் இயக்குநருக்கு தொகை எதுவும் தரவேண்டியதில்லை. ஆனால் நல்ல வாசிப்பாளர். நிறைய புத்தகங்கள் பரிசளிக்கலாம். அதேபோல் வந்துபோவதற்கான பயணப்படி கொடுத்துவிடலாம் என்றும் பேசியிருந்தேன். சரியென்றார்கள்.

10/10/09 இரவு 9மணிக்கு நானும் குணாவும் (துணைக்குத்தான்) தேனி ஓட்டலுக்கு சென்றுவிட்டோம். பிரபாவும், சொர்ணபாரதியும் இருந்தார்கள். குளிரூட்டப்பட அறையாதலால், நடுநடுங்கியது. வரவேற்றார்கள். பேசிக்கொண்டிருந்தோம். இடையில் தமிழ்முதல்வனும் (மதுரைக்காரராதலால் அவரையும் நிகழ்வுக்கு நான் தான் வரச்சொல்லியிருந்தேன்.)வந்துவிட்டார். கொஞ்சநேரம் இலக்கியம் பேசிக்கொண்டிருந்தோம். தமிழ்தமுதல்வன் தனது ஆயுதக்கோடுகள் கவிதைநூலை பிரபாவிடமும், சொர்ணபாரதியிடமும் கொடுத்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார். சிறிதுநேரத்தில் இயக்குநர் கைபேசியில் அழைத்து தான் வந்துவிட்ட செய்தியைச்சொன்னார். பேருந்து நிலையம் சென்று அவரை அழைத்துவர நானும் குணாவும் சென்று அழைத்துவந்து, அனைவரிடமும் அறிமுகப்படுத்தினேன். பின் அவருக்கான அறைக்குச்சென்றோம். நேரம் கடந்துகொண்டிருக்க, அவருக்குப்பிடித்த புத்தகங்களை அவரையே தேர்வுசெய்யச் சொல்லலாம் எனறு முடிவெடுத்து, அவரையும் அழைத்துக்கொண்டு புத்தகக்கடைக்குப்போனோம். மணி 10க்கு மேலாகிவிட்டிருந்தது. புத்தகங்கள் தேர்வுசெய்ததில் சில புத்தகங்களே அமைந்தன. ஆனந்தவிகடனில் தொடராக வெளிவந்த நாஞ்சில்நாடனின் தீதும் நன்றும் பிறர்தர வாரா, எஸ்.ராமகிருஷ்ணனின் தேசாத்திரி, பெருமாள் முருகனின் ஏறுவெயில், ஜெயகாந்தனின் கங்கை எங்கே போகிறாள், ஜானின் ஆணிவேர் திரைப்படத்திரைக்கதைத் தொகுப்பு, இன்னும் சில புத்தகங்கள் என தேர்வுசெய்து வாங்கிக்கொண்டோம். மணி 11 ஆகிவிட்டிருந்தது. குணாவும், தமிழ்முதல்வனும் வயிறு கடிக்கிறது, சாப்பிடப்போகலாம் என்றனர். இயக்குநரைப்பார்த்தேன். நீங்கள் சாப்பிடுங்கள். நான் வரும்போதே சாப்பிட்டு வந்தேன் என்றார். பிரபாவைவும், சொர்ணபாரதியையும் முன் சாப்பிட அனுப்பிவிட்டு, இயக்குநரிடம் சாப்பிடலாமா என்றேன். சரி என்றார். அறைக்குப்போகலாம் என்று முடிவானது. அறைக்குப்போவதற்கு முன்னமே ஓட்டல் காவலாளியிடம் தேவையானவற்றை சொல்லிவிட்டு, அறைக்குச்சென்றுவிட்டோம். எல்லாம் தயார். பிரபா கைபேசியில் கூப்பிட்டார். ஏதாவது வாங்கிவரவா? என்றார். புரோட்டாவும், தோசையும் வாங்கிவரச்சொல்லிவிட்டு பேசிக்கொண்டிந்தோம். புரோட்டாவும் தோசையும் வந்தது. அனைவரும் சாப்பிட்டோம். இலக்கியம், சினிமா, அரசியல் என நிறைய பேசிக்கொண்டிருந்தோம். சினிமா அனுபவங்களை ராஜமோகன் எங்களிடம் பகிர்ந்துகொண்டார். நல்லதொரு நண்பராக, சினிமாஎனும் மாயவலைக்குள் சிக்காத ஒரு எதார்த்த படைப்பாளியாக, வெள்ளந்தியாக பேசியது அனைவரையும் கவர்ந்தது. மணி 1 ஆகிவிட, கண்கள் சுழல, உறங்கப்போனோம்.

11/10/09 காலை 10மணிக்கு நிகழ்ச்சி. 8,30வரை தூக்கம். எழுந்து குளித்துத்தயாரான போதுதான் யோசனைக்குள் மூழ்கினேன். காதல் கவிதைநூல் வெளியீட்டு விழா, அதுவும், தபுசங்கர் பாணிக்கவிதைகள, சுத்தமாக உடன்பாடே இல்லாத கவிதைகள், சும்மா போனேன் / வந்தேன் கவிதைகள், இதைஎப்படி பாராட்டிப்பேசுவது..? அல்லது இதெல்லாம் கவிதையே இல்லை என்று கிழித்துவிடலாமா..? குழப்பத்தின் முடிவில், பிரபா! கவிதைகுறித்து நான் எதுவும் தயாரிப்புடன் வரவில்லை. முன்னிலை என்று என்பெயர் போட்டிருக்கிறீர்கள். என்னை பேச அழைக்க வேண்டமே..! என்றேன். ஏதாவது பேசுங்கள் என்று கட்டாயப்படுத்தினார். 11 மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது. கவிஞருக்கு தெரிந்தவர்கள், உறவினர்கள் என்று ஒவ்வொருவராக வந்துசேர அரங்கம் நிறைந்தது. கவிஞர் பள்ளிஆசிரியராக இருப்பதால் முழுக்க சக ஆசிரியர்களே கூடுதலாக வந்திருந்தனர். நிகழ்ச்சிநிரலில் இருந்தவர்களே அரங்கத்தில் இருந்த பாதிப்பேருக்கு மேலிருக்கும். இலக்கியவாதிகளை விட கல்லூரி முதல்வர், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சேர்ந்தவர்கள் ( இலக்கிய விழாவென்றால் இலக்கியவாதிகள் நிறைந்திருப்பர். இதுவொரு குடும்ப விழாபோலதானே! இங்கே இலக்கியவாதி களையோ, இலக்கிய ஆர்வலர்களையோ தேடுவது தவறுதானே..?) என்று நிறைந்திருந்தனர். சொர்ணபாரதி தான் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார், பிரபா வரவேற்புரையாற்றினார். முன்னிலைவகித்து (?)நானும் கடனேவென இரண்டு வார்த்தை பேசினேன். வாழ்த்தவந்தவர்களெல்லாம் கவிஞரையும், காதலையும் அநியாயத்திற்கு வாழ்த்தினர். (பின்னென்னங்க நிகழ்ச்சிக்கு அழைத்தவரை கன்னாபின்னவென்று வாழ்த்தாமல் குற்றங்குறை கூறமுடியுமா)அதற்கு மனம் இடம் தருமா?) ஆசிரியப்பெருமக்கள்… சொல்லவா வேண்டும்.. அருவியாய்… கொட்டித்தீர்த்தனர். ( நூலாசிரியர் இறுக்கமான மனநிலையிலேயே இருந்தார். இருக்காதாபின்ன? நிகழ்ச்சி ஏற்பாடு பண்ணினவனுக்குத்தானே தெரியும் அதன் துயரம்? நேரம் போகப்போக அரங்க வாடகை கூடும்… மைக்செட்காரனுக்கு பணம் படடுவாடா பண்ணனும், காதல்கவிதை எழுதியவரின் முகத்தில் புன்னகையே இல்லை. சிரிக்கக்கூட இயலாதவர் எப்படி காதல் கவிதை எழுதினாரென தெரியவில்லை.) எதுஎப்படியோ நிகழ்ச்சி இறுதிவடிவம் பெற்றது. வேண்டாமெனச் சொல்லியும் கேட்காமல் மூன்று நட்சத்திர ஓட்டலில் தான் மதிய உணவு முடிக்க வேண்டுமென்று கூறிவிட்டார்.( இயக்குநருக்கு நம்ம ஸ்டென்த்த காட்டவேண்டாமா என்ன) உணவு முடிந்து அறைக்கு வந்து பேசிக்கொண்டிருந்தோம். மாலை 5 மணியாகிவிட்டது. இப்ப புறப்பட்டால்தான் குறித்தநேரத்திற்கு திருப்பூர் போய் சேரமுடியும். பிரபாவை அழைத்து இயக்குநருக்கான பயணப்படியை வாங்கிக்கொடுங்கள், கொடுத்துவிட்டு நான் செல்கிறேன் என்றேன். சிறிது நேரத்திற்குப்பின் இன்னொரு அறைக்கு அழைத்தார். கவிஞர் விஜயகாந்திராஜ் இருந்தார். என்னசெய்ய ? என்றார். பயணப்படி? என்றேன். ஒருதொகையைக்கொடுத்தார். பெற்றுக்கொண்டேன். திட்டமிடாமல் நிறைய செலவுசெய்துவிட்டார் நண்பர்.எனவே சிறிய தொகைமடடும் இயக்குநருக்கு அளித்துவிடலாம் என்றார். எதுவும்பேசவில்லைநான். கிட்டத்தட்ட நானூறுரூபாயிற்கு மேல் செலவு செய்திருந்தேன் நான். உங்களுக்கு எதாவது வேண்டுமா என்றுகூட கேட்கவில்லை. குறைந்த பட்சம் பயணப்படியாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். விடைபெற எழுந்தோம். ராஜமோகனிடம் தொகையைக்கொடுத்துவிட்டுப்புறப்பட தயாரானோம், நானும் குணாவும். நண்பர் வாழை குமார் பேருந்துநிலையம் வரை வந்தார். திருப்பூர் பேருந்து ஏறினோம். திருப்பூரிலிருந்து தேனிக்கு சொந்த காசில் வந்து, நிகழ்ச்சியில் கலந்துவிட்டு சொந்தக்காசிலேயே ஊர்திருப்ப யார் சொன்னது? அப்படி நம்ம இலக்கியம் வளர்த்தவில்லையெனில் அதுவளராதா ? நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இதையெல்லாம் ஏன் கவனத்தில் கொள்வதில்லை? குறைந்தபட்சம் பயணப்படிகூட கொடுக்காமல் / மூன்று நட்சத்திர அறையும், உயர்வகை உணவும் யார் கேட்டது? அதிலெல்லாம் பிரமாண்டாம் காட்டுகிறவர்கள் ஏன் சின்னச்சின்ன விசயங்களில் கூட கவனம் செலுத்தாது இருக்கின்றனர்? மனம் ஆயிரம்கேள்விகளுடன் ஆளாய்ப்பறந்தது. நமது நேரத்தை செலவளித்து இப்படியான நிகழ்வுகளில் கலந்து கொள்ளலாம். பணத்தையும் இழக்கவேண்டுமா…! எத்தனை பட்டாலும் புத்திவராது நமக்கும். தெரிந்தோ தெரியாமலோ இரவு சாப்பிட்ட புரோட்டாவும் குருமாவும் நினைவுக்கு வந்தது. மிச்சம் அதுதான். இரவு மணி ஒன்றுக்கு மேலாகியும் உறக்கமின்றி பேருந்தின் / திரைப்படத்தின் இரைச்சலில் கரைந்துகொண்டிருந்தேன். மீண்டும் நாளையோ நாளை மறுநாளோ பொள்ளாச்சி, உடுமலை, கோவை இப்படி ஏதாவதொரு பகுதியிலிருந்து ஒருவர் கைபேசியில் அழைத்து தோழர் ஒரு கவிதைப்புத்தகம் வெளியீட்டுவிழா இருககிறது. அவசியம் நீங்கள் வரவேண்டும் எனலாம். அப்படியா அவசியம் வருகிறேன் என்று நானும் கூறலாம். அப்போது மறுபடியும் இப்படியான ஒரு அனுபவப்பதிவை எதாவதொரு வலைபூவில் எழுதிக்கொண்டிருப் பேன், நான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக